மதுரையிலிருந்து குற்றாலத்தை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளுடன் வந்த வேனும், தென்காசியில் இருந்து எதிர் திசையில் வந்த காரும், திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இலத்தூர் விலக்கு பகுதியில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

மோதிய வேகத்தில் காரும் வேனும் கணநேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த விபத்தில் காரில் இருந்த ஓட்டுநர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாகத் தீப்பற்றுவதற்குள் வெளியேறி உயிர் தப்பினர். இருப்பினும், விபத்தில் காயமடைந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரு வாகனங்களும் முழுவதுமாகத் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போக்குவரத்தைச் சரிசெய்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.