தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை கிராமப் பகுதியில், கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் கண்ணன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் அதிகளவில் சரள் மண் சட்டவிரோதமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில், விஜயபாண்டியன் என்பவர் குளத்தில் கரம்பை மண் அள்ளுவதற்காகக் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜனிடம் உரிய அனுமதி பெற்றிருந்தது தெரியவந்தது.
ஆனால், அவர் அனுமதியை மீறி ஜேசிபி வாகனங்களைப் பயன்படுத்தி அப் பகுதியில் சரள் மண்ணைத் தோண்டி அள்ளி எடுத்துச் சென்றது அம்பலமானது.
இது தொடர்பாகக் கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் கண்ணன் அளித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரள் மண் அள்ளப் பயன்படுத்தப்பட்ட 2 ஜேசிபி வாகனங்களையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
மேலும், கனிமவளத்தைத் தவறாகப் பயன்படுத்திய வாகன உரிமையாளர் மற்றும் ஜேசிபி ஓட்டுநர்களான ராஜதுரை, கோமதி சங்கர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

