நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஏற்கனவே 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆக்லாந்தில் உள்ள ஈடன்3பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜுக்குப் பதிலாக அன்ஷூல் கம்போஜ் களம் இறக்கப்பட்டார்.

மைதானத்தின் சிறிய எல்லைகளையும், பவுன்ஸ் மற்றும் ஸ்விங் சூழலையும் கச்சிதமாகப் பயன்படுத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து பேட்டர்களைத் திணறடித்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக டிம் செய்ஃபெர்ட் 38 ரன்களும், பிளேர் டிக்னெர் 34 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அர்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும், அன்ஷூல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (0) ஏமாற்றம் அளித்தார். எனினும், சுப்மன் கில்லும் விராட் கோலியும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Kholi50.jpg

ஆட்டத்தின் நடுவே இருமுறை மழை குறுக்கிட்டதால், DLS முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டு 32 ஓவர்களில் 143 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 35 பந்துகளில் தனது 80-வது அரைசதத்தைக் கடந்து 74 ரன்களில் (51 பந்துகள், 13 பவுண்டரிகள், 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். கேப்டன் சுப்மன் கில் 37 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. நேர்த்தியான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்ஷூல் கம்போஜ் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 7-ந்தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.