தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளைக் கையாடல் செய்து, ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், 1,000-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சத்துணவு முட்டைகள் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தைச் செய்து வருகிறார்.
நாமக்கல்லில் இருந்து நேரடி விநியோகம் செய்வதில் சிரமம் இருந்ததால், அவர் துணை ஒப்பந்ததாரர்கள் மூலம் முட்டைகளை விநியோகித்து வந்தார். இதில், துணை ஒப்பந்ததாரரான நாகராஜ் (47) மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் (25) ஆகியோர், பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய முட்டைகளில் ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 பெட்டிகள் வரை கையாடல் செய்து வந்துள்ளனர். இவ்வாறு திருடப்படும் முட்டைகளைச் சில்லறை விலையில் ரூ.5-க்கு ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் கிராமப் பொதுமக்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி முட்டைகளைக் கள்ளச்சந்தையில் விற்றுக் கொண்டிருந்தபோது, அங்குச் சென்ற செய்தியாளர் ஒருவர் அதனைப் படம் பிடிக்க முயன்றுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கும்பல், வாகனத்தை வேகமாக இயக்கித் தப்பியதுடன், வழியிலேயே செய்தியாளரின் வாகனத்தை மறித்து, "இது உங்களுக்குத் தேவையில்லாத வேலை; நீங்க எந்த ஊர்? உங்களை ஊரிலேயே வந்து பார்த்துக்கிறோம்" என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
செய்தியாளர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கவே, போலீசார் வருவதை அறிந்த அந்த நிலைகுலைந்த கும்பல் வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று தலைமறைவானது.
இச்சம்பவம் குறித்து முதன்மை ஒப்பந்ததாரர் பிரசாத்திடம் கேட்டபோது, "இப்புகார் தற்போதுதான் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. குற்றச்சாட்டிற்கு உள்ளான நாகராஜ் மற்றும் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முட்டை விநியோகத் துணை ஒப்பந்தம் உடனடியாக வேறு நபர்களுக்கு மாற்றப்படும்" எனத் தெரிவித்தார்.
அதேபோல், அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு மாவு மூட்டைகளை ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊழியர்கள் விற்பதாகவும், பருப்புகளை ஹோட்டல்களுக்குக் கொடுப்பதாகவும் எழுந்துள்ள புகார்கள் குறித்துக் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பத்மாவிடம் கேட்டபோது, "இதுவரை அதிகாரப்பூர்வப் புகார்கள் எதுவும் வரவில்லை.
இருப்பினும் சட்டவிரோதமாகச் சத்துணவுப் பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான விசாரணை நடத்தப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

