அமெரிக்காவின் 'ஸ்டான்போர்ட் எல்செவியர்' வெளியிட்டுள்ள உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலவியல் துறை பேராசிரியர் செல்வம் 6-வது முறையாக இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் 'ஸ்டான்போர்ட் எல்செவியர்' உலகில் உள்ள சுமார் 1 லட்சம் முன்னணி விஞ்ஞானிகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத் துறைகள் அடங்கியுள்ளன. ஆராய்ச்சி தரம், மேற்கோள்களின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவர அடிப்படையிலான அளவுகோல்கள் மூலம் முன்னணி விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

2026-ம் ஆண்டுக்கான 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஸ்டான்போர்ட் எல்செவியர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலவியல் துறை பேராசிரியர் செல்வம் உலகில் 55 ஆயிரத்து 663-வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், 57 ஆயிரத்து 17-வது இடத்தைப் பெற்றிருந்த அவர், தற்போது 6-வது முறையாக மீண்டும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் அறிவியலியல் துறையில் உலகளவில் 1,40,934 ஆராய்ச்சியாளர்களில் 1,253-வது இடத்தைப் பெற்றுள்ள அவர், இந்திய அளவில் இந்தத் துறையில் 74-வது இடத்தைப் பெற்றுள்ளார். அனைத்து அறிவியல் துறைகளையும் உள்ளடக்கிய இந்திய நரவியலில் 6,922 ஆராய்ச்சியாளர்களில் 1,042-வது இடத்தைப் பெற்று, முதல் 0.15 சதவீத ஆராய்ச்சியாளர்களுக்குள் இடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நிலவியல் துறையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பேராசிரியர் செல்வம், நிலத்தடி நீர்லவ ஆய்வு மற்றும் மேலாண்மை, கடலோர நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபாடு, நுண்ணெகிழி துகள்களால் ஏற்படும் பாதிப்புகள், கடலோர சுற்றுச்சூழல் மாற்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 5 நூல்களையும் வெளியிட்டுள்ளார். பேராசிரியர் செல்வம் சாதனையை பாராட்டி வ.உ.சி. கல்லூரிச் செயலாளர் ஏ.பி.சி. சோசலிங்கம், முதல்வர் வீரபாகு மற்றும் சக பேராசிரியர், மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.