கனடாவை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள ஐரோப்பிய தலைவர்கள் திட்டமிட்டு வருவது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: "ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது என்பது மிகவும் சிரிக்கத்தக்க ஒன்றாகும். அமெரிக்காவின் அண்டை நாடான கனடா ஒரு மோசமான வர்த்தகப் பங்காளியாக நடந்து கொள்கிறது.

ஐரோப்பிய தலைவர்கள் நல்ல நோக்கத்தில் செயல்பட்டால் நலம். மாறாக, கெட்ட உள்நோக்கத்துடன் செயல்பட்டால் ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா சார்பில் மிகப்பெரிய அளவில் வரிகள் விதிக்கப்படும். மேலும், ஐரோப்பாவின் சில பகுதிகளில் எங்களது வர்த்தக நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்திக் கொள்வோம்.

ஐரோப்பிய நாடுகளை நாம்தான் இதுவரை சுமந்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் கார்கள், கட்டிடக் கட்டுமானப் பொருட்கள், உணவுகள் என அனைத்தும் உள்ளன." என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைக்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு உடன்படாவிட்டால் கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகக் கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

தற்சமயம் தனது நாட்டின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதத்தை அமெரிக்காவிற்கே செய்து வரும் கனடா, இனி அமெரிக்காவை மட்டும் முழுமையாகச் சார்ந்திராமல் சுதந்திரமாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக் கனடா பிரதமர் மார்க் கார்னி விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.