இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்பவருமான மகேந்திர சிங் தோனி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார்.
தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. பல இக்கட்டான சூழல்களில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தோனி, ரசிகர்களால் 'தல' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், வீரராக விடைபெற்றுள்ள தோனி இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணி ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அணி வெளியிட்டுள்ள பதிவில், "ஒருமுறை வாழ்வில் கிடைக்கும் அரிய வீரர். புதிய பொறுப்பு; என்றென்றும் தொடரும் பந்தம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.
சென்னை அணியின் தொடக்க காலம் முதல் பல வெற்றிகள், சவால்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களில் தோனி முக்கியப் பங்காற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அணி நிர்வாகம், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களை உருவாக்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் தோனி தொடர்ந்து அணியுடன் பயணிப்பார் எனத் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். தொடரிலிருந்து தோனி ஓய்வு பெற்றுள்ளதும், புதிய ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளதும் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சி.எஸ்.கே. ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

