ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியதுடன், ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கையில் பேஜர் கருவியைக் காண்பித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ், ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானுக்கு எதிராகத் தனது நாடு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசினார்.
அப்போது தனது கையில் பேஜர் கருவி ஒன்றைக் காண்பித்த அவர், "இந்த பேஜர் கருவி ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு நிச்சயம் நினைவிருக்கும்" என எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய நெதன்யாகு: "கடந்த மூன்று ஆண்டுகளில், எங்கள் படை வீரர்கள் ஏழு வேறுபட்ட முனைகளில் போரிட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் அளவே உள்ள வேறு எந்த நாடாவது, மூன்று ஆண்டுகளாக ஏழு முனைகளில் இவ்வாறு போரிட முடியுமா?
ஈரானின் கொலைகார சர்வாதிகார அரசு அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பேன் என நான் உறுதி அளித்திருந்தேன். இஸ்ரேலை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட அணு ஆயுதங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலானவை. எங்களை உலக வரைபடத்தில் இருந்தே அழிக்க ஈரான் திட்டமிட்டது. ஆனால் நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து ஈரானைத் தாக்கி, அதன் ராணுவத்தையும் அணு ஆயுத மையங்களையும் அழித்தோம்" எனத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது போர்க்குற்றச்சாட்டு மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்தி வரும் நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியைக் கடுமையாக விமர்சித்த நெதன்யாகு: "உங்களுக்கு வெட்கமாக இல்லையா மம்தானி? என்னை உங்களால் மவுனமாக்க முடியாது; உண்மையையும் மறைக்க முடியாது. இஸ்ரேல் இனப்படுகொலையைச் செய்யவில்லை, மாறாக இனப்படுகொலையைத் தடுத்தது. எங்கள் மக்களைக் கொடூரமாகக் கொன்ற ஹமாஸுக்கு ஆதரவளிப்பதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
நீங்கள் மேயராகப் பொறுப்பேற்றதிலிருந்து நியூயார்க்கில் உள்ள பல யூதர்கள் பாதுகாப்பற்ற உணர்வைப் பெறுகிறார்கள். 9/11 தாக்குதலை நியாயப்படுத்தியவர்களை உங்கள் நண்பர்களாகக் கொண்டிருக்கிறீர்கள். எனது நியூயார்க் வருகையைத் தடுக்க நீங்கள் முயன்றீர்கள், ஆனால் உங்களால் எனது குரலையோ அல்லது உண்மையையோ ஒடுக்க முடியாது" என ஆவேசமாகப் பேசினார்.
77 நாட்டுத் தலைவர்கள் புறக்கணிப்பு - வெளிநடப்பு:
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐ.நா. சபையில் உரையாற்ற மேடைக்கு வந்த உடனடியாக, 77 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் அவரது உரையைக் புறக்கணித்து அரங்கத்தை விட்டு வெளியேறினர். இதனால் அரங்கத்தின் பெரும்பகுதி காலியானது.
இதனால் கடும் கோபமடைந்த நெதன்யாகு, "இந்த அரங்கத்தில் இன்னும் ஏதேனும் தார்மீகக் கோழைகள் வெளியேறாமல் இருந்தால், தயவுசெய்து அவர்களும் இப்பொழுதே வெளியேறிவிடலாம்" எனப் பதிலடி கொடுத்துத் தனது உரையைத் தொடர்ந்தார்.

