களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் நான்கு வழிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (56). பாஜக பிரமுகரான இவர் இவர் செப்டம்பர் 4-ஆம் தேதி குடும்பத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழாவைக் கொண்டாடுவதற்காகக் கோவை ஈஷா யோகா மையத்திற்குச் சென்றுள்ளார்.
விழா முடிந்து செப்டம்பர் 6-ஆம் தேதி அதிகாலையில் குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, வீட்டின் பக்கவாட்டு படிக்கட்டு வழியாக மாடிக்குச் செல்லும் கதவு மற்றும் அறையின் கதவுகள் உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அறையின் உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயர் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அசோக்குமாரின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த நகைகளே திருடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் களியக்காவிளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், மாடி வழியாக உள்ளே புகுந்து நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். மேலும், தடயம் தெரியாமல் இருப்பதற்காகச் செல்லும் வழியில் மிளகாய்ப் பொடியைத் தூவிச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துக் களியக்காவிளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

