அதிமுகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் முறையே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏக்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த 6 பேரின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் தனித்தனியே வழக்குத் தொடர்ந்தனர். தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் சூழலில், அவர்களின் ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லாது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இவ்வழக்கில் மனுதாரர்கள், சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.
அதிமுகவின் 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டது முழுமையாகச் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை குறித்துச் சபாநாயகர் அடுத்த 2 மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சபாநாயகர் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

