நாகர்கோவிலில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கோட்டாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நபரைச் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட சொத்தவிளை பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் இல்லத்தில் (Moon Trukal Trust Guest House), சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த தாமஸ் கொரோஸ்டென்ஸ்கி (60) என்பவர் தங்கி வருகிறார்.
இந்நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி பிற்பகல் 12.10 மணியளவில் தாமஸ் கொரோஸ்டென்ஸ்கி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சுசீந்திரம் செல்வதற்காக அரசுப் போக்குவரத்துச் கழகப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கும், பேருந்தில் பயணித்த முன்னாள் ராணுவ வீரர் பாபு என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுப் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த மோதலில் ஆஸ்திரிய நாட்டவரான தாமஸ் கொரோஸ் டென்ஸ்கிக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் கோட்டாறு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் பாபுவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், இச்சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களிலோ அல்லது பொதுமக்கள் மத்தியிலோ உறுதி செய்யப்படாத தகவல்களையோ, வதந்திகளையோ பரப்பக் கூடாது என்றும், காவல் துறையின் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும் மாவட்டக் காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

