2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் கமல்ஜீத் மற்றும் சுருச்சி சிங் ஆகியோர அடங்கிய இணை அபாரமாகச் செயல்பட்டுத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இப் பிரிவில் ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக 484.6 புள்ளிகளைக் குவித்து கமல்ஜீத் - சுருச்சி இணை புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இப்பிரிவில் தென் கொரிய அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஈரான் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. நடப்பு ஆசிய விளையாட்டுப் தொடரில் இந்திய அணி பெறும் 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது. இதுவரை எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியிருந்த இந்தியத் துப்பாக்கி சுடுதல் அணிக்கு, இத் தங்கப் பதக்கம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

பதக்கப் பட்டியல் நிலவரம்:

தற்போது இந்திய அணி மொத்தம் 2 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது. சீனா 85 தங்கம் உட்பட மொத்தம் 135 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.