ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் (Squash) கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி அபாரமாக விளையாடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. சாதனை படைத்த இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற வீரர்களைப் பாராட்டி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: "ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
இவ் வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாகத் தலா ரூ. 30 லட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்

