பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறம் கார் மோதிய கோர விபத்தில், காரில் பயணித்த பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). சென்னையில் பணிபுரியும் இவர், தனது தம்பி ரஜினி குமாரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகத் தனது மனைவி சூர்யா (35), நண்பர்களான பிரபாகரன் (30), காளீஸ்வரன் (25), கண்ணதாசன் (22), ஜான் கென்னடி (35) மற்றும் சரண்யா (23) ஆகியோருடன் ராமநாதபுரத்திற்குச் சென்றுள்ளார்.
திருமணம் முடிந்ததும், நேற்று இரவு 7 பேரும் காரில் ராமநாதபுரத்திலிருந்து மீண்டும் சென்னை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறம் கார் எதிர்பாராதவிதமாகப் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இக் கோர விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து, காரில் பயணித்த பிரபாகரன் மற்றும் காளீஸ்வரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் டவுன் போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகப் பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மனைவி சூர்யா ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
படுகாயமடைந்த கண்ணதாசன், ஜான் கென்னடி மற்றும் சரண்யா ஆகிய 3 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இவ்விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராஜசீலன் (45) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

