25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ள ‘மூன் வாக்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபுதேவா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இது குறித்துப் பகிர்ந்துள்ள தகவலில், “குடும்ப நகைச்சுவை பொழுதுபோக்கு படமான ‘மூன் வாக்’ டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த விடுமுறையை உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சிரித்து மகிழ, சிரிப்பொலிகள் நிறைந்த திரையரங்க கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
‘மூன் வாக்’ படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், படத்திலுள்ள அனைத்துப் பாடல்களையும் அவரே பாடியிருப்பதுடன், படத்தின் ஒரு காட்சியிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
90-களில் ஏ.ஆர்.ரஹ்மான் - பிரபுதேவா கூட்டணியில் வெளியான ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’ ஆகிய படங்களும் அவற்றின் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றிருந்தன. இந்தக் கூட்டணி கடைசியாக கடந்த 1997-ஆம் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தது. தற்போது சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மூன் வாக்’ படத்தின் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்; அனுப் வி ஷைலஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்த இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 24-ஆம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

