நகை செய்து தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் சுமார் 200 பவுன் நகைகளை மோசடி செய்ததாக நகை பட்டறை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த கணேசன் மகன் சுப்பிரமணியன் என்ற ரவி என்பவர் ஆத்தூரில் சொந்தமாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் பல ஆண்டுகளாக அங்குத் தொழில் செய்து வந்ததால், அப்பகுதி மக்கள் தங்களது நகை தேவைகளுக்காக அவரிடம் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்; மேலும் சிலர் பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகள் செய்து தருமாறு கேட்டுள்ளனர்.

இவ்வாறு சுமார் 60 பேரிடம் இருந்து ஏறத்தாழ 200 பவுன் நகைகளைச் சுப்பிரமணியன் பெற்றுள்ளார். ஆனால், வாங்கிய யாருக்கும் புதிய நகைகளைச் செய்து கொடுக்காமலும், அவர்கள் கொடுத்த பழைய நகைகளைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து முன்னதாகச் சில பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது போலீசார் விசாரணை நடத்தியபோது, "விரைவில் நகைகளைத் திரும்ப வழங்கிவிடுவேன்" என்று சுப்பிரமணியன் கூறியதன் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வாக்குறுதிப்படி நகைகளைத் தராததால் பாதிக்கப்பட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் நேரில் சென்று தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள நகை பட்டறை உரிமையாளர் சுப்பிரமணியனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.