தமிழ்நாட்டில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் கருப்பைவாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், 14 வயது பூர்த்தியடைந்த சிறுமிகளுக்கு இலவசமாகக் 'கார்டாசில்' தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்குக் கருப்பைவாய் புற்றுநோய் புதிதாகக் கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாகக் கருப்பைவாய் புற்றுநோயே அதிகளவில் கண்டறியப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 682 பெண்கள் இப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை இப் புற்றுநோயிலிருந்து முன்கூட்டியே பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 'கார்டாசில்' (Gardasil) என்ற கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 14 வயது பூர்த்தியடைந்த மற்றும் 15 வயது பூர்த்தியடையாத சிறுமிகளுக்கு இத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 1,715 சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

இத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்குக் பெற்றோர்களின் ஒப்புதல் படிவம் கட்டாயமாகும். தடுப்பூசி செலுத்தப்படும் சிறுமிகளின் விவரங்கள் 'U-WIN' செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு மின்னணுத் தடுப்பூசி சான்றிதழ் (Digital Vaccination Certificate) வழங்கப்படும்.

14 வயது நிறைவடைந்த சிறுமிகளின் பெற்றோர்கள் இப்பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் பெண் குழந்தைகளைக் கருப்பைவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாத்திடத் தடுப்பூசி செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.