தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,08,000 அபராதம் விதித்துத் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள முதலைமொழியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (48) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி முருகன் இன்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜமாணிக்கம் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,08,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.