தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது: "தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பைப் பொறுத்தவரையில் சாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, 'வணிகர்' என்ற ஒரே அடிப்படையில் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறது.

வியாபாரிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் பேரமைப்பு வேடிக்கை பார்க்காது. நியாயம் இல்லை என்றால், தவறு செய்பவர் வணிகராகவே இருந்தாலும் அவர்களைத் தட்டிக் கேட்க நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம். தனியார் நகை அடகு நிறுவனம் ஒன்று குறித்துத் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். அதனைத் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நேரில் ஆய்வு செய்யவுள்ளது.

அந்த நிறுவனத்தில் நகை அடகு வைப்பதில் என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன, எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதையெல்லாம் கணக்கிட உள்ளோம். மேலும் அங்கு அடகு வைத்த நகையை மிரட்டித் திருப்ப வைப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

எனவே, அந்தத் தனியார் நிறுவனத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதில் பேரமைப்பு உறுதியாக உள்ளது. நாங்கள் எங்களது நடவடிக்கைகளை எப்போதுமே சட்டப்படிதான் மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.