விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கே.எஸ்.ஆர். பெங்களூரு - திருநெல்வேலி இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாகச் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரயில் இயக்க அட்டவணை மற்றும் வழித்தடம்:
கே.எஸ்.ஆர். பெங்களூரு - நெல்லை சிறப்பு இரயில் (எண்: 06527):
இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.35 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த இரயில், பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக நாளை (சனிக்கிழமை) காலை 4.30 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து காலை 4.40 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நாளை மதியம் 1.15 மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும்.
நெல்லை - பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு இரயில் (எண்: 06528):
மறுமார்க்கத்தில், நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.45 மணிக்குத் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த இரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக இரவு 9.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், இரவு 9.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டைச் சென்றடையும்.
பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் இச்சிறப்பு இரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் இரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

