» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றி அமைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

செவ்வாய் 28, நவம்பர் 2023 11:12:26 AM (IST)

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று திரைப்படத்துறையினருக்கு முன்னாள் முதல்-அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை காலம் சக்கையாக துப்பிவிடுகிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்தையும் சுவடுகளற்ற பயணமாகவும் காலம் மாற்றி விடுகிறது. ஆனால், பிறருக்காக வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகளை காலம் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கிறது. அத்தகைய மகத்தான மனிதர்கள் இந்த உலகை விட்டு மறைந்து விடலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, மனித குலத்திற்கு ஆற்றிய பங்களிப்பை காலம் பத்திரமாக போற்றி பாதுகாக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையையும் அப்படித்தான் காலம் போற்றி பாதுகாக்கிறது.

சங்க காலத்தில் பேகன் தோகை விரித்த மயிலுக்கும், பாரி துவண்டு விழுந்த கொடி மலருக்கும் மனம் இறங்கியதைப் போல, பிற்காலத்தில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல, இதயத்தின் வழியே சுரக்கும் ஈரம்தான் மனித நேயத்தின் வாசல் என்ற ஈகையின் மகத்துவத்தை கடைபிடித்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பார்களே அதைப்போல இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள்.

தன்னுடைய திரைப்படங்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும், கருத்துள்ள பாடல்களையும் மக்கள் மனதிலே பதிய வைத்து, மக்களை நல்வழிபடுத்திய மாபெரும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். அவர்கள். "எனது இதயக்கனி எம்.ஜி.ஆர்" என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்டதற்கு அடித்தளமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். அவர்கள். "தம்பி நீ முகத்தைக் காட்டினால் போதும், முப்பது லட்சம் ஒட்டு வரும்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களே எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறியதை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, அவருடைய கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் இருந்து, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிய பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திரைத் துறை மற்றும் அரசியல் துறை ஆகிய இரண்டிலும் கொடிகட்டி பறந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைந்து, வரலாற்றின் பக்கங்களில் ஒரு நிலையான, நிரந்தரமான இடத்தை பிடித்த மகத்தான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

எம்.ஜி.ஆர். மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்தவராக இன்றும் அவர் வாழ்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் செய்த அளப்பரிய சாதனைகள்தான். இப்படிப்பட்ட மகத்தான தலைவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள் டிசம்பர் 24. இந்த நாள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாளில், தமிழ் திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார்?" என்ற பாடல் வரிகளுக்கேற்ப, மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆர். அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

JAY RASIGARDec 7, 2023 - 04:30:26 PM | Posted IP 172.7*****

நாட்டுக்கு ரொம்ப அவசியம் இதை சொல்கிறார். சென்னை தண்ணீரில் மூழ்கி கொண்டுள்ளது, மக்களுக்கு எதாவது உதவி செய்ய தோணுதா ??? பதவி என்றால் டயரை கும்பிடுவது. சரியான சுயநலவாதி....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory