» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அமித்ஷா உடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

புதன் 26, மார்ச் 2025 5:06:29 PM (IST)



அமித்ஷா உடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்குதான் அவரை சந்தித்தேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட தொடங்கி விட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து பேசினார். இதன் மூலம் மீண்டும் அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். மும்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது; அப்படி மேற்கொண்டால் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும்.

மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களிலும் நடவடிக்கை கோரியும், தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முழுமையாக விசாரிக்க கோரியும் வலியுறுத்தினோம். தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள் பிரச்சினைகள் குறித்தும் அமித்ஷாவிடம் தெரிவித்தோம். அதிமுக அலுவலகத்தை பார்வையிடவே வந்தேன். நேரம் கிடைத்தால் அவரை பார்க்கலாம் என்று இருந்தோம். அதன்படி, நேரம் ஒதுக்கப்பட்டதும் 45 நிமிடம் ஒவ்வொரு பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்து அவரிடம் பேசினோம்.

கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்கு தான் அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படுவது, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. 

கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும். தேர்தல் நேரத்தில் என்ன சூழ்நிலை இருக்குதோ, அதை பொறுத்தே கூட்டணி மாறும். கூட்டணி இருக்கு இல்லை என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காணும் கட்சி அதிமுக. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

சந்திரன்Mar 28, 2025 - 02:05:07 PM | Posted IP 162.1*****

நம்பிட்டோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory