» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்
வெள்ளி 20, செப்டம்பர் 2024 5:46:46 PM (IST)
வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது 2-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவர்களில் 376 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் குவித்தனர்.
வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் ஆரம்பம் முதலே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இன்னிங்சின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுடன் தொடங்கிய பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆகாஷ் தீப் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை காலி செய்தார்.
முடிவில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் வெறும் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் ரோகித் சர்மா ஏமாற்றம் அளித்தார். இன்னிங்சின் 3-வது ஓவரிலேயே தஸ்கின் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைதொடர்ந்து சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வாலும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா தடுமாறியது.
பின்னர் கில்லுடன் கை கோர்த்த விராட் கோலி சிறிது நேரம் போராடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் 37 பந்துகளை சந்தித்த அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சுப்மன் கில் நிலைத்து விளையாடினார். 2-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கில் 33 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.