» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆஷஸ் போட்டிக்கு இணையானது: ஸ்டார்க் பேட்டி

வியாழன் 22, ஆகஸ்ட் 2024 12:03:07 PM (IST)



இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆஷஸ் போட்டிக்கு நிகரானது என்று ஆஸ்திரேலிய பவுலர் ஸ்டார்க் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் நவ.22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இவ்விரு அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடப்பது 1991-92-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கு இப்போது 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படுவதால் அனேகமாக இது எங்களுக்கு ஆஷஸ் தொடருக்கு (ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் போட்டி) இணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் உள்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம். இந்தியா மிகவும் வலுவான அணி என்பதை அறிவோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இரு இடங்களில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உள்ளன. அதனால் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கு இது மிகுந்த உற்சாகமான தொடராக இருக்கப்போகிறது. ஜனவரி 8-ந்தேதி நாங்கள் அங்கு அமர்ந்திருக்கும் போது அந்த கோப்பை எங்கள் கையில் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்குரிய பச்சை நிற தொப்பியை அணியும் போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். இந்த கோடை காலத்தில் 5 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்று, 5 முறை வெற்றி கொண்டாட்டத்தின் பாடலை பாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிப்பேன். 100 டெஸ்டுக்கு மேல் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்றால், அது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

இங்கிலாந்தில் நடக்க உள்ள வெள்ளைநிற பந்து தொடரில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாட விரும்புகிறோம். ஆனால் 12 மாதங்களில் வெவ்வேறு விதமான சூழலை சந்திக்க வேண்டி இருப்பதால் ஓய்வு தேவைப்படுகிறது. எங்களது பந்து வீச்சு வாழ்க்கை குறிப்பிட்ட நாளில் முடிவுக்கு வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. உடல் ஒத்துழைத்தால் தொடர்ந்து செல்ல விரும்புவோம். இப்போதைக்கு எங்களது முழு கவனமும் இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் மீதே உள்ளது. இவ்வாறு ஸ்டார்க் கூறினார்.

34 வயதான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 89 டெஸ்டுகளில் விளையாடி 358 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் இந்தியாவுக்கு எதிராக 18 டெஸ்டுகளில் ஆடி 48 விக்கெட் எடுத்ததும் அடங்கும்.


மக்கள் கருத்து

SAMUELAug 27, 2024 - 04:23:33 PM | Posted IP 162.1*****

FINGHTING IN THE INDIA VS AUSTRALIA TEST MATCH GOOD TEAM ......THANKS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory