» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!

புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)


நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா விளையாட்டு மைதானத்தினைப் புதுப்பித்து மேம்படுத்தும் வகையில், ரூ.1.19 கோடி மதிப்பில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட கன்னியாகுமரி ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் தங்கிப் பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் தேசிய அளவில் சிறந்து விளங்கி வருகிறார்கள். இந்நிலையில், மைதானத்தை மேம்படுத்தக் கோரி விளையாட்டு வீரர்களும் தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இக்கோரிக்கையின் அடிப்படையில், அண்ணா விளையாட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சியர் பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மைதானத்தில் பயன்பாட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தைச் சீரமைக்க மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மைதான வளாகத்தில் உள்ள மகளிர் விளையாட்டு வீராங்கனைகள் விடுதியை ஆய்வு செய்த ஆட்சியர், அங்குள்ள பழுதுகளை உடனே சரிசெய்ய உத்தரவிட்டதுடன், வீராங்கனைகளுக்குத் தயார் செய்யப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பளுதூக்கும் வீரர்கள் அறை, கூடைப்பந்து பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக்கூடம், கழிப்பறைகள் ஆகியவற்றைச் சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மைதான வளாகத்தில் செயல்பட்டு வரும் படிப்பகம் மற்றும் ஒரு பகுதியில் இயங்கும் விளையாட்டு வீரர்களுக்கான தட்டச்சு பயிற்சி மையத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார். இந்தத் தட்டச்சு பயிற்சி மையத்தை மேலும் விரிவுபடுத்தி விளையாட்டு வீரர்களுக்கு உரிய பயிற்சி வழங்க மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அத்தோடு மைதானத்திற்குட்பட்ட வணிக வளாகக் கடைகளின் வாடகை முறையாகச் செலுத்தப்படுகிறதா என்றும் தணிக்கை செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் நிறைவாக, கூடைப்பந்து மைதானம், பெண்கள் விடுதி, பளுதூக்கும் கூடம், உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம், கழிப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அனைத்தும் மொத்தம் ரூ.1.19 கோடி மதிப்பில் முழுமையாகச் சீரமைக்கப்படவுள்ளதாக ஆட்சியர் பிரதாப் உறுதியளித்தார்.

ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜாண் ஆசிர், பொறியாளர் ஸ்டீபன், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory