» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செய்தியாளர்களைத் தடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் டி.எஸ்.ஆர். சுபாஷ் புகார்!

சனி 25, ஏப்ரல் 2026 8:42:02 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை அவமதித்த அதிகாரிகள் மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ) சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கப் பொதுச் செயலாளருமான டி.எஸ்.ஆர். சுபாஷ் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தேர்தல் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி அட்டை (Pass) வழங்குவதில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் (PRO) பெரும் பாரபட்சம் காட்டியுள்ளனர். நடுநிலையுடன் செயல்படும் பல பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியினருக்குச் சாதகமானவர்களுக்கும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சியில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்படும் போது, அதனைப் படம் பிடித்த செய்தியாளர்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். செய்தியாளர்களின் பணியைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களைக் காவல்துறையினர் அவதூறாகப் பேசியிருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைத் துறையை அவமதிக்கும் செயலாகும்.

நேர்மையான பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கத் தடையை ஏற்படுத்தியதன் மூலம், தேர்தல் வெளிப்படையான முறையில் நடைபெற்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் முதல் செய்தித் துறை அதிகாரிகள் வரை பல இடங்களில் ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறியதோடு, அவர்களின் சுதந்திரத்தையும் அதிகாரிகள் பறித்துள்ளனர்.

எனவே, பத்திரிகையாளர்களை இன்னலுக்கு உள்ளாக்கிய தேர்தல் அதிகாரிகள், செய்தித் துறை அதிகாரிகள் மற்றும் வரம்பு மீறிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி, தலைமைத் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகார் மனுவில் டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory