» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்! - மதுரையில் வாக்களித்த மு.க.அழகிரி சூசக பதில்!

வியாழன் 23, ஏப்ரல் 2026 4:47:49 PM (IST)



மதுரையில் மனைவியுடன் வாக்களித்த மு.க.அழகிரி, தேர்தல் முடிவுகள் குறித்துக் கேட்டபோது, "யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்; ஒன்றும் புரியவில்லை" எனச் சூசகமாகப் பதிலளித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி, மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குத் தனது மனைவி காந்தியுடன் வருகை தந்தார். இருவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அதன் விவரம்: "வாக்களிப்பது முக்கியமானது. மற்றவர்களைப் போலவே நானும் என் கடமையை ஆற்றியுள்ளேன்" என்றார்.

தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, தனது பாணியில் நகைச்சுவையாக, "தேர்தல் கொஞ்சம் சூடாக இருக்கிறது. ஆம், வெளியே வெயில் மிகவும் சூடாக இருக்கிறது" என்று பதிலளித்தார்.

தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்ற முக்கியமான கேள்விக்கு, "தெரியவில்லை. நான்தான் அன்றைக்கே சொல்லிவிட்டேனே, யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். ஒன்றும் புரியவில்லை" என்று மிகச் சுருக்கமாகவும், புதிராகவும் பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள மு.க.அழகிரி, கட்சியில் மீண்டும் இணைக்கப்படாதது அவரது ஆதரவாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவரது மகள் கயல்விழி அளித்த பேட்டி ஒன்றில், "ராமனுக்கே 14 ஆண்டுகள் தான் வனவாசம், ஆனால் என் அப்பா ஓரம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது" என்று குறிப்பிட்டது அரசியல் களத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், "யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்" என்ற அவரது பதில், திமுகவின் வெற்றி குறித்து அவர் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லையோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory