» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் கழித்த நாட்கள் என் வாழ்வின் பொற்காலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!!
புதன் 11, மார்ச் 2026 11:16:05 AM (IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மக்களுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு: "அன்புச் சகோதர சகோதரிகளே! தமிழகச் சொந்தங்களே! கடந்த 54 மாதங்கள் உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்திருந்தேன். வாழ்க்கைப் பயணத்தில் இப்போது உங்களை விட்டுப் பிரியும் சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள் என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பொறுப்பேற்றபோது, கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்திருக்கவில்லை. இருப்பினும், நீங்கள் காட்டிய ஆதரவு என்னைப் பெரிதும் கவர்ந்தது. எளிய மக்கள், குழந்தைகள் என அனைவரும் காட்டிய அந்தப் புன்னகையும் நேசமும், என்னை ஒரு தமிழ் குடும்பத்தின் உறுப்பினராகவே உணரச் செய்தன."
"சங்கப் புலவர்களின் சமுதாய நோக்கம், திருவள்ளுவரின் மாண்பு மற்றும் சமகால இலக்கியங்கள் எனத் தமிழின் பல்வேறு பரிமாணங்களை நேரடியாக அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழக மக்களின் அயராத உழைப்பும், அந்த உழைப்பில் அவர்கள் காணும் மகிழ்ச்சியும் என்னைப் பிரமிக்க வைத்தன. தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நான் சென்ற இடமெல்லாம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வாக்கு மெய்யாக மிளிர்ந்ததைக் கண்டேன்."
"பல்கலைக்கழகங்களுக்குச் சென்றபோது, தமிழக மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை, குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவை (AI) இயற்கையான செறிவோடு கையாளுவதைக் கண்டு வியந்தேன். அவர்களுடனான உரையாடல்கள் எனக்குள் பெரும் உத்வேகத்தைத் தந்தன. அது ஒரு மேம்பட்ட அனுபவமாக (Enriching Experience) அமைந்தது."
"தமிழகத்தின் ஆகச்சிறந்த மேன்மை அதன் திருக்கோயில்கள். தில்லை நடராஜரும், திருவரங்க ரங்கநாதரும் தமிழ் மக்களின் குடும்ப உறுப்பினர்களாகவே இருந்து அருள் பாலிக்கிறார்கள். அங்குள்ள சிற்பங்களும் கல்வெட்டுகளும் பாரதப் பண்பாட்டு கருவூலங்கள். இவற்றை இளைஞர்கள் போற்றிப் பாதுகாத்து ஆராய வேண்டும்."
"தேசிய நீரோட்டத்திற்குத் தலைவெள்ளம் தந்தவர்கள் தமிழர்கள். 1857-ம் ஆண்டு சிப்பாய்ப் புரட்சிக்கு முன்பே, 1806-ல் வேலூர் புரட்சி வெடித்தது. பூலித்தேவன், கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் முதல் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி, ருக்மிணி லட்சுமிபதி போன்ற வீரப் பெருமக்கள் காட்டிய தேசப்பக்தி ஈடு இணையற்றது."
"சொல்லச் சொல்ல விரியும் எனது அனுபவங்களுக்கு அடிப்படையாக இருந்தது நீங்கள் காட்டிய அன்புதான். அந்த அன்பிற்கும் நன்றிக்கும் ஈடாகச் சொல்ல வார்த்தைகள் போதாது. உங்கள் நலம் வளர நான் என்றென்றும் பிரார்த்திப்பேன்" என ஆளுநர் தனது அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆர்டர்லி முறை ஒழிப்பு: மாவட்ட ஆட்சியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 11, மார்ச் 2026 11:38:12 AM (IST)

கோவை அரசுப்பள்ளி உணவில் பல்லி: 43 மாணவர்கள் பாதிப்பு - இபிஎஸ் கண்டனம்!
புதன் 11, மார்ச் 2026 10:55:14 AM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவு
செவ்வாய் 10, மார்ச் 2026 8:11:37 PM (IST)

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:26:06 PM (IST)

கோவில் சொத்துக்களும் உருக்கிய தங்கமும் எங்கே? - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:02:52 PM (IST)








