» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில் சொத்துக்களும் உருக்கிய தங்கமும் எங்கே? - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!

செவ்வாய் 10, மார்ச் 2026 4:02:52 PM (IST)

சுவாமிமலை முருகன் கோவில் மின்தூக்கி விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு அளித்துள்ள விளக்கம் முரணாக உள்ளதாகவும், கோவில் நிதி மற்றும் தங்கம் எங்கே சென்றது என்றும் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சுவாமிமலை திருக்கோவிலில் மின்தூக்கி அமைப்பதில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தற்போது புதுவிதமான விளக்கத்தை அளித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, அறநிலையத் துறை சார்பிலேயே மின்தூக்கி அமைக்கப்படுவதாகக் கூறி 'ஸ்டிக்கர்' ஒட்டிக் கொண்டிருந்த அமைச்சர், இப்போது திடீரென இது உபயதாரர்கள் நிதி என்று கூறி 'பல்டி' அடித்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் பேசிய அமைச்சர், ஜூன் மாதமே இந்த மின்தூக்கி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்தார். ஆனால், இது செயல்பாட்டுக்கு வர ஏன் இரண்டு ஆண்டுகள் ஆனது? 20 பேர் செல்லும் வகையில் அமைக்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது 13 பேர் மட்டுமே செல்லும் வகையில் அமைத்தது ஏன்? நேற்றைய தினம் 10 பேர் ஏறியபோதே மின்தூக்கி பழுதாகி நின்றது ஏன்? எனப் பல கேள்விகள் எழுகின்றன.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் நிதியில்தான் நடைபெற்றது என்றால், கோவில்களின் பல கோடி ரூபாய் நிதி, சொத்துக்கள் மற்றும் உருக்கப்பட்ட தங்கம் ஆகியவை எங்கே சென்றன? கடந்த இரண்டு ஆண்டுகளில் உபயதாரர்கள் வழங்கிய ரூ.2,000 கோடி நிதியில் செய்யப்பட்ட 12,200 திருப்பணிகள் எவை? அறநிலையத் துறை நிதியில் செய்யப்பட்ட பணிகள் எவை? என்ற பட்டியலை வெளியிடத் தயாரா?

மின்தூக்கி இயக்குபவரின் முதுகில் அறைந்ததை, 'அன்பாகத் தட்டிக் கொடுத்தேன்' என்று அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரைத் தட்டிக் கொடுத்ததாகக் கூறினார்கள். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மனு கொடுத்த பெண்ணைத் தலையில் அடித்தார். திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண மக்களை 'அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போது' ஏன் முகம் கோபமாக இருக்கிறது? இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் சாடியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory