» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாலியல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் காசிக்கு கந்து வட்டி வழக்கில் 3 ஆண்டு சிறை!
சனி 4, ஜனவரி 2025 8:45:18 AM (IST)
பாலியல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நாகர்கோவில் காசிக்கு கந்து வட்டி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்க பாண்டியன் மகன் காசி (29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏராளமான இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்ததோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.
அந்த வகையில் காசி மீது கோட்டார், வடசேரி மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்துவட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதே சமயத்தில் காசி கைதான நாள் முதல் சிறையிலேயே இருந்தார்.
இதனையடுத்து காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.அதே சமயத்தில் மீதமுள்ள 6 வழக்குகளில், 2 வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இதில் நாகர்கோவில் அலெக்ஸ்சாண்டிரா பிரஸ் ரோட்டை சேர்ந்த டிராவிட் என்பவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் தொடா்ந்த கந்து வட்டி வழக்கு விசாரணையும் ஒன்று. அதாவது காசி, அவரது தந்தை தங்க பாண்டியன் மற்றும் வடசேரியை சேர்ந்த புரோக்கர் நாராயணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரூ.2 லட்சம் கடனுக்கு டிராவிட்டிடம் இருந்து கந்து வட்டி வசூலித்தும், மேலும் டிராவிட் மோட்டார் சைக்கிளை போலி ஆவணங்களை தயாரித்து காசியின் பெயருக்கு மாற்றவும் முயன்றுள்ளனர்.
இந்த கந்து வட்டி வழக்கு விசாரணை நாகர்கோவில் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில், காசி மற்றும் புரோக்கர் நாராயணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தங்க பாண்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கந்து வட்டி வழக்கில் நாகர்கோவில் காசி உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.