» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீடுபுகுந்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது: வெளிநாட்டில் இருந்தபடி விரட்டிய உரிமையாளர்!!

சனி 4, ஜனவரி 2025 8:39:45 AM (IST)

நாகர்கோவிலில் வீடுபுகுந்து கொள்ளையடிக்க முயன்றபோது வெளிநாட்டில் இருந்தபடி உரிமையாளரால் விரட்டப்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில் கோட்டார் ரகுமத் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் (58). இவரது மகன் மஸ்கட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மகனை பார்ப்பதற்காக சலீம் கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் மஸ்கட்டுக்கு சென்றார். இவர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வைத்திருந்தார். கடந்த 31-ந் தேதி நள்ளிரவு வெளிநாட்டில் இருந்தபடியே தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை சலீம் ஆய்வு செய்தார்.

அப்போது 2 மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சலீம் பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தார். உடனே, அக்கம் பக்கத்தினர் சலீம் வீட்டை முற்றுகையிட்டு, ‘திருடன்... திருடன்...’ என கூச்சலிட்டனர். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க உதவி சூப்பிரண்டு லலித்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக பதிவாகி இருந்தது. அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரித்தபோது ஒருவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சேர்மத்துரை (41) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்து ஒரு மாதம் தான் ஆவதாக கூறப்படுகிறது. மற்றொருவர் பணக்குடியை சேர்ந்த முத்து (37) என்பது தெரிய வந்தது. இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளன.

மேலும் கொள்ளை நடந்த வீட்டின் வெளியே ஒருவர் நின்று கொண்டிருந்ததும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் பணக்குடியை சேர்ந்த வெட்டும்பெருமாள் (45) என்பது தெரிய வந்தது. இவர் மீதும் அடிதடி வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முத்து, வெட்டும் பெருமாள் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் சிறையில் இருந்த போது பாவூர்சத்திரத்தை சேர்ந்த சேர்மத்துரையுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் வெளியே வந்த நிலையில் சேர்மத்துரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து நாங்கள் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டி நாகர்கோவிலுக்கு வந்தோம். நாகர்கோவிலில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க முடிவு செய்தோம். சலீம் வீட்டில் இருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருட முயன்றோம். 

இதேபோல் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் திருட முயன்றோம்’ என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட முத்து, வெட்டும் பெருமாள் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாகியுள்ள சேர்மத்துரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory