» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு
செவ்வாய் 31, டிசம்பர் 2024 5:51:48 PM (IST)
தமிழகத்தில் ஜன.3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட கடந்த வாரம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மேலும், இலவச வேட்டி மற்றும் சேலைகளும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பொங்கல் தொகுப்பை பெறுவதற்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் வீடுவீடாகச் டோக்கன் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஒரு நாளுக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பை பெறும் வகையில் டோக்கன் வழங்கப்படவுள்ளது. பொங்கல் தொகுப்பு பெறும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிட்டு வீடுவீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.