» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
செவ்வாய் 31, டிசம்பர் 2024 11:38:25 AM (IST)
ஆண்டுதோறும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும் என கன்னியாகுமரியில் நடைபெற்ற வெள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரினை வெளியிட்டார்.
மேலும், கன்னியாகுமரி பேரூராட்சியில் 44 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் போக்குவரத்து தீவுப் பூங்காவை திறந்து வைத்து, 1.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, கன்னியாகுமரி கடற்கரை சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை எனப் பெயர் சூட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்தியத்துணைக் கண்டத்தின் வடக்கே அமைந்துள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக, தென்கோடி குமரிமுனையில் கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவர் அவர்களுக்கு 133 அடியில் சிலை அமைத்து 1.1.2000 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்து, வள்ளுவரின் வானுயர் புகழுக்குச் சாட்சியாக திகழ்ந்தார்.
கலை நுணுக்கத்தோடு பார்போற்றும் வகையில் விண்ணைத்தொடும் வண்ணம் உயர்ந்து நிற்கின்ற பெருமைமிகு திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசின் சார்பில் பெருவிழா கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12.11.2024 அன்று அறிவித்தார்.
அதன்படி, அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி நேற்று (30.12.2024) அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் மற்றும் பூம்புகார் விற்பனையகம் ஆகியவற்றை திறந்து வைத்தது, திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தது, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையில் அமைக்கப்பட்டுள்ள சீரொளிக் (லேசர்) காட்சியினைத் தொடங்கி வைத்தது, சொல்வேந்தர் சுகி.சிவம் தலைமையில் "திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே – சமுதாயத்திற்கே" எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் (31.12.2024) திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சி, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியீடு, அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வளைவிற்கு அடிக்கல் நாட்டுதல், திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசுகள் வழங்குதல், பியானோ இசைக் கலைஞர் செல்வன் லிடியன் நாதஸ்வரம் அவர்களின் திருக்குறள் இசை நிகழ்ச்சி, அய்யன் திருவள்ளுவரின் பெருமைகளை எடுத்துரைக்கும் தமிழறிஞர்களின் கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாளை (1.1.2025) திருக்குறள் ஓவியக் கண்காட்சி திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், இப்புகைப்படக் கண்காட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியது, சிலை உருவாக்கப்பட்ட நிகழ்வு, சிலையின் சிறப்பு, சிலை திறப்பு விழா ஆகியவை பற்றி விளக்கும் குறும்படத்தை பார்வையிட்டார்.
வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீடு
இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட "அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் – 2025” தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் வெளியிட, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொண்டார். இச்சிறப்பு மலரில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், வை.கணபதி ஸ்தபதி, கு. அழகர்சாமி, சாலமன் பாப்பையா, யுகபாரதி, ஆர். பாலகிருஷ்ணன், படிக்கராமு, அருணன், வா.மு. சேதுராமன், நெல்லை ஜெயந்தா, பழனிபாரதி போன்ற பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய கவிதைகள், திருக்குறள் வரலாற்றுக் குறிப்புகள், திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் போன்றவை இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அலங்கார வளைவிற்கு அடிக்கல் நாட்டுதல்
கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் அரசு விருந்தினர் மாளிகை அருகில்
1 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வளைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் 44 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் போக்குவரத்து தீவுப் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, கன்னியாகுமரி கடற்கரை சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என தமிழ்நாடு முதலமைச்சர் பெயர் சூட்டினார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, பள்ளி பயிலும் மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் அய்யன் திருவள்ளுவரின் பொருண்மைச் சார்ந்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது.
அப்போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் பிரிவில் வெற்றி பெற்று முதல் பரிசு வென்ற செல்வி ர. நேசிகாவிற்கு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு வென்ற செல்வி ர. மதுஜாவிற்கு ரூ.3,250/-, மூன்றாம் பரிசு வென்ற செல்வி ம.எ. சுபிஷாவிற்கு ரூ.2,500/-; இரண்டாம் பிரிவில் வெற்றி பெற்று முதல் பரிசு வென்ற செல்வி மு. சரண்யா பவானிக்கு ரூ. 5,000/-, இரண்டாம் பரிசு வென்ற செல்வன் த. தரணிதரனுக்கு ரூ. 3,250/-, மூன்றாம் பரிசு வென்ற செல்வி பா. நவீனாவிற்கு ரூ.2,500/-; என மொத்தம் 21,500 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்தினார்.
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, திருக்குறளின் பெருமையை உயர்த்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே மீக்குறும்படங்கள், திரைச்சுருளைகள் மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்படி, போட்டிகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் மீக்குறும்படங்கள் பிரிவில் முதலிடம் பெற்ற நித்யஸ்ரீ, திரைச்சுருளைகள் பிரிவில் முதலிடம் பெற்ற அக்சா, ஜோஸ்பின் ஆகியோருக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் மீக்குறும்படங்கள் பிரிவில் முதலிடம் பெற்ற வி. ஹரிஹரன், திரைச்சுருளைகள் பிரிவில் முதலிடம் பெற்ற நாகர்கோவில் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் – எஸ். ஹரிதா, ஆர். அபிநயா, எஸ். ஆன்டோ, சுதிக்சா, எஸ். நாராயணா மற்றும் செல்வி ஆகியோருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
முன்னதாக, அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலப் பணிகளை மேற்கொண்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பாடல் வரிகளில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், உருவான "வள்ளுவ மாலை” பாடலை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
இவ்விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கவிப்பேரரசு வைரமுத்து, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் டாக்டர் இரா. வைத்திநாதன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். அழகுமீனா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.