» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 19, நவம்பர் 2024 8:27:35 AM (IST)
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நடைமேடை மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்த இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இருந்து பீகார் மாநிலம் ஜோத்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.22663), அதற்கு மாற்றாக வரும் 23-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோத்பூர் செல்லும்.
மறுமார்க்கமாக, வரும் 26-ஆம் தேதி முதல் ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (22664), அதற்கு மாற்றாக தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும். குறிப்பாக இருமார்க்கமாகவும் இந்த ரயில் செல்லும்போதும் எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 நிமிடம் மட்டும் நின்று செல்லும்.
எழும்பூர் - செங்கோட்டை
மேலும், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12667), அதற்கு மாற்றாக வரும் 21-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும். மறுமார்க்கமாக, வரும் 22-ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12668), தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். எழும்பூர் செல்லாது.
இதேபோல, எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (20681), அதற்கு மாற்றாக நாளை (புதன்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கமாக, வரும் 21-ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (20682), தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். எழும்பூர் செல்லாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.