» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது: சீமான் குற்றச்சாட்டு!

வியாழன் 21, நவம்பர் 2024 12:38:34 PM (IST)

தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நாட்டினை தி.மு.க. அரசு மெல்ல மெல்ல மாற்றி வருகிறது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் மீது கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் மனதைக் கொதிக்கச் செய்கிறது.

தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அரசு மருத்துவர், அரசுப்பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர் என்று பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழும் கொலைவெறித் தாக்குதல்கள் யாவும் தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால், பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வியை ஒவ்வொரு மக்களுக்குள்ளும் எழுப்புகிறது.

தமிழ்நாட்டில் சாதியத் தீண்டாமை கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பட்டப்பகலில் நாள்தோறும் நிகழும் படுகொலைகள், பெருகி ஓடும் கள்ளச்சாராயம், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் என தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நாட்டினை தி.மு.க. அரசு மெல்ல மெல்ல மாற்றி வருகிறது. முதல்-அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாட்டின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. 

இந்த கொடூர கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா? ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் யாவும் தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே தமிழ்நாட்டில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதையே உணர்த்துகிறது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory