» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்!
சனி 16, நவம்பர் 2024 12:31:01 PM (IST)
சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு செய்வதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், நவம்பர் மாதத்தின் முதல் பாதி கடந்து விட்ட நிலையில் இன்று வரை ஆள்தேர்வுக்கான அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை.
வயது வரம்பு குறித்த குழப்பங்களும் தீர்க்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான முனைவர் பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் தொடர்பான இந்த விவகாரத்தில் தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. சட்ட உதவிப் பேராசிரியர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு எனக்குத் தெரிந்த நாளில் இருந்து 57 ஆகத் தான் இருந்து வருகிறது. ஆசிரியர் பணிகளைப் பொறுத்தவரை பணியில் சேரும் ஒருவர் குறைந்து ஓராண்டு முழுமையாக பணி செய்யும் நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் வயது குறித்த தகுதி ஆகும்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட சட்ட விரிவுரையாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வரை வயது வரம்பு 57 ஆகத் தான் இருந்தது. அது தான் சரியான அணுகுமுறை ஆகும். ஆனால், 2018-ஆம் ஆண்டு முதல் அதிகபட்ச வயது 40 ஆக குறைக்கப்பட்டு விட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கு இப்போதும் அதிகபட்ச வயது 57 ஆகத் தான் இருக்கிறது.
ஒரே வகையான ஆசிரியர் பணிக்கு கலை அறிவியல் துறையினருக்கு ஒரு வயது வரம்பும், சட்டக்கல்வித் துறையினருக்கு ஒரு வயது வரம்பும் நிர்ணயிப்பது முறையல்ல. அது இயற்கை நீதியும் அல்ல. உண்மையில் தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதிகபட்ச வயது 59 ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பதிலாக 40 ஆக குறைக்கப்பட்டிருப்பதால் சட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட பல்லாயிரம் பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
சட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கான அனைத்துத் தகுதிகளையும் ஒருவர் பெறுவதற்கு 30 வயதாகி விடும். அதன்பின் 10 ஆண்டுகள் மட்டுமே அவர்கள் சட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கு போட்டியிட முடியும். தமிழ்நாட்டில் 10 ஆண்டு இடைவெளியில் அதிகபட்சமாக இரு முறை மட்டும் தான் சட்டக்கல்லூரிக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவரின் வாழ்க்கையில் அரசு வேலைவாய்ப்புக்காக வெறும் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டும் வழங்குவது சமூகநீதியும் அல்ல, சம நீதியும் அல்ல.
எனவே, சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும். அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு செய்வதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை ஏற்கெனவே அறிவித்தவாறு இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.