» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!
வெள்ளி 15, நவம்பர் 2024 5:56:42 PM (IST)
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நிதி மற்றும் சுற்றுச்சுழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், இ.கா.ப., பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் த.மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட எம் அய்யன் வள்ளுவருக்கு வானளாவிய சிலையினை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 01.01.2000-ம் ஆண்டில் திறப்பு விழா காணப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு (வெள்ளி விழா) வருகின்ற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01, 2025 ஆகிய இரண்டு தினங்களில் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெள்ளி விழா நிகழ்வானது அய்யன் திருவள்ளுவருக்கு பல்வேறு சிறப்புகளை செய்யும் வகையிலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அறிவிப்புகளை வெளியிடும் நிகழ்ச்சியாகவும் இந்த வெள்ளி விழா நிகழ்ச்சி அமையும். அதனை சிறப்பு சேர்க்கும் வகையில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் சுவாமி விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் கண்ணாடி இழை கூண்டுப்பாலம் அமைக்கும் பணிகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கண்ணாடிக் கூண்டு பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கைகளால் திறந்து வைக்கும் வகையில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நம்முடைய மாவட்ட ஆட்சியர் நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு பால பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, அப்பணிகள் விரைந்து முடிக்க விரைவுப்படுத்தி உள்ளார்கள். இன்றைக்கு நான் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையினை இணைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். இப்பணிகள் மிகச்சிறப்பான முறையில், நாம் அனைவரும் எதிர்பார்த்த வகையில் நடைபெற்றுக் கொண்டுவருகிறது. இப்பணிகள் அனைத்தும் என்னால் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் டிசம்பர் 20-ம் தேதிக்குள் முழுமையாக முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளி விழா தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் (Helipad) தளத்தில் 01.01.2000-ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் நடத்தப்பட்ட அதே இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வெள்ளி விழா சிறப்பாக அமைந்திட அனைத்து ஏற்பாடுகளும் ஒருங்கிணைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக கன்னியாகுமரி முக்கோண பூங்கா சீரமைப்பு பணிகள், காந்தி நினைவு மண்டப வளாக சுற்றுச்சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு, அழகுப்படுத்தப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் அனைத்து முடித்து வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு வருகை தரும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள் மாவட்ட பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் கன்னியாகுமரி முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழா சிறப்பாக நடைபெற அனைத்து பணிகளையும், அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டுமென நிதி மற்றும் சுற்றுச்சுழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.காளீஸ்வரி, முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ் ராஜன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சத்தியமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் வேல்ராஜ், மின்சாரத்துறை கண்காணிப்பு அலுவலர் பத்மகுமார், உதவி செயற்பொறியளார் (கட்டடம்) முருகேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பூம்கார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகா, கனகராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கண்ணன், செயல் அலுவலர் ரமாதேவி, நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரவணன், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அருண் காந்த், பிரேமலதா, வட்டார வேளாண்மை குழு உறுப்பினர் தாமரை பாரதி, வட்டார மருத்துவக்குழு உறுப்பினர் பாபு, வழக்கறிஞர் பார்த்தசாரதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.