» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: ஆட்சியர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்
வெள்ளி 15, நவம்பர் 2024 5:44:06 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளியில் இன்று (15.11.2024) நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வஹாப், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறித்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து கலைப்போட்டிகளை பார்வையிட்டார்.
சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பின்படி மாணவர்களின் கலைத் திறமைகளை கண்டறிந்து ஊக்குவித்து அவர்களை வளர்த்தெடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் இப்போட்டியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு தற்போது மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது. முதலில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் மாணவர்கள் குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.
1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 3 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 9 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 11 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என தனித்தனியாக நடத்தப்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 1262 மாணவர்களும், ஒன்பது முதல் பத்தாம் வகுப்புகளில் 646 மாணவர்களும், 11 முதல் 12 ஆம் வகுப்புகளில் 560 மாணவர்களும் ஆகமொத்த 2468 மாணவர்கள் இந்த மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் .
கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தொடங்கி வைத்து பேசியதாவது : சூழல் பாதுகாப்பு அனைவரும் பொறுப்பு என்ற தலைப்பில் இக்கலைவிழா நடைபெறுவது மகிழ்ச்சியாகும். மாணவ, மாணவியர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்த இந்த நிகழ்ச்சி பெரும் பங்களிப்பாக இருக்கும். திருநெல்வேலி மாவட்டம், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வளங்களை கொண்ட மாவட்டம் நமது திருநெல்வேலி மாவட்டம் ஆகும்.
வற்றாத நதியான நமது தாமிரபரணியை நாம் அனைவரும் தூய்மைப்படுத்தி பாதுகாப்பது நமது கடமையாகும். இயற்கையோடு இயற்கையாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலையை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பசுமை மின் உற்பத்தியில் நமது மாவட்டம் முதன்மையாக செயல்படுகிறது. நமது மாவட்டத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டுக்கு 3500 மில்லியன் மின்சாரம் காற்றாலையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நமது மாவட்டம் 1700 மில்லியன் மின்சாரம் தான் பயன்படுத்தி வருகிறோம். மீதமுள்ள மின்சாரத்தை நாட்டிற்கு வழங்கி வருகிறோம். இது நமது மாவட்டத்திற்கு பெருமை தரக்கூடிய செயலாக உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் குப்பைகளும், கழிவுநீரும் சேராமல் நாம் பாதுகாக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் பங்களிப்போடு இயற்கையை காத்து தாமிரபரணியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமான மரங்களை நட்டு இயற்கையை பராமரிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பனை மரங்களை நடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே 1400 குளங்கள் உள்ளது. இந்தாண்டு புதிதாக 400 குளங்களை உருவாக்கி வருகிறோம். சுற்றுசுழல் மாறும் படும்போது இயற்கை இடர்பாடுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வரும் காலங்களில் சுற்றுசூழலை பாதுகாக்க மாணவர்களாகிய உங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். வரும் சந்ததியினர்களுக்கு இயற்கையான சூழலை உருவாக்கி தருவது நமது அனைவரது கடமையாகும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையாளர் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி.வசந்திமேரி பிரிந்தா, உதவி திட்ட அலுவலர் சிவராஜ் உட்பட, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.