» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
வெள்ளி 15, நவம்பர் 2024 8:21:16 AM (IST)
தி.மு.க. நிர்வாகியை வெட்டிக்கொன்ற அண்ணன்-தம்பி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் முத்துராமன் (வயது 35). தி.மு.க. நிர்வாகியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு வள்ளியூர் முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களை வரவேற்கும் வகையில் டிஜிட்டல் பேனர் வைத்து இருந்தார்.
இதற்கு தெற்கு வள்ளியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த தங்கவேல் (56) எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. எனவே, தங்கவேல் தனது உறவினர்கள் மூலம் முத்துராமனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.
கடந்த 12.9.2020 அன்று இரவில் தெற்கு வள்ளியூர் ரேஷன் கடை அருகில் முத்துராமன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த தங்கவேலின் உறவினர்களான முருகன் மகன் மற்றொரு முத்துராமன் (30), அன்பழகன் மகன்கள் ராம்கி என்ற ராம்குமார் (27), தில்லை சண்முகம் (26), இசக்கியப்பன் மகன் குணா என்ற குலசேகரபெருமாள் ஆகிய 4 பேரும் சேர்ந்து காரை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள், காரில் இருந்த முத்துராமனை வெளியே இழுத்து போட்டு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேல், முத்துராமன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப்பு அளித்தார். முத்துராமன், ராம்குமார், தில்லை சண்முகம், குலசேகரபெருமாள் ஆகியோருக்கு கொலை குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனையும், கூட்டு சதிக்காக மற்றொரு ஆயுள் தண்டனையும் விதித்தார். தங்கவேலுக்கு கூட்டு சதிக்காக ஒரு ஆயுள் தண்டனையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மற்றொரு ஆயுள் தண்டனையும் விதித்தார். 5 பேரும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.