» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

திங்கள் 22, ஜூலை 2024 8:28:24 AM (IST)



புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சையும், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் நடந்தது. அதன்பின், டாக்டர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, உடல் நிலை சீரான பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், அதற்காக பல்வேறு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி மற்றும் ரத்த பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கைதிகள் சிகிச்சை பெறும் தனி வார்டுக்கு மாற்றபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து, இதயவியல் பரிசோதனை மேற்கொள்வதற்காக, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு அதே நாள் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். பின்னர் ழுழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கணையத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்ததில் அவருக்கு சிறிய அளவிலான கொழுப்பு கட்டி இருப்பது தெரிய வந்தது. மேலும், கை, கால் மரத்து போகுதல் பிரச்சினையும் இருந்தது.

அதற்காக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறப்பு மருத்துவ குழு மூலம் செந்தில் பாலாஜிக்கு 22 நாள் தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பில் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். புழல் சிறையில் தனி வார்டில் உள்ள செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

அவரது உடல்நிலையை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதித்து வருகிறார்கள். இதற்கிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று மாலை 3.40 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக போலீசார் பாதுகாப்பில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருதயவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதயவியல் டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இதேபோல, அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக செந்தில்பாலாஜியை இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. தற்போது அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவாரா? இல்லையா? என்பது இன்று தெரியவரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory