» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திங்கள் 22, ஜூலை 2024 8:13:50 AM (IST)



சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி கோலாகலமாக நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலிலும் ஒன்றாகும். சிவன் வேறு, விஷ்ணு வேறு என வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடி உத்திராடம் நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாகவும், சங்கரலிங்க சுவாமியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய நிகழ்ச்சி ஆடித்தபசு விழாவாக பக்தர்களால் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

மேலும் கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 9 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திரமவுலீஸ்வரருக்கு அபிஷேக அலங்காரமும், 9.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

மதியம் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4.15 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு, தெற்கு ரத வீதியில் உள்ள தபசு காட்சி கொடுக்கும் தபசு பந்தலுக்கு வந்தார்.

இதைத் தொடர்ந்து தபசு மண்டபத்தில் இருந்த கோமதி அம்பாள், தபசு பந்தலுக்கு வந்தார். இதையடுத்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

மாலை 6.58 மணிக்கு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார். கோலாகலமாக நடந்த இதை கண்டதும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் வீசினர்.

பக்தர்கள் சங்கரா, நாராயணா என பக்தி கோஷங்களை விண்ணதிரே முழங்கினர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

திருவிழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, பெரம்பலூர் மாவட்ட நீதிபதி சங்கர், நீதிபதிகள் நரசிம்மமூர்த்தி, மாரிக்காளை, கணேசன், தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் கவிதா, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசாரும், விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்களும் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory