» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் : ரூ.10,000 முதல் பல லட்சங்கள் வரை கட்டாய வசூல்!

செவ்வாய் 26, மே 2026 10:37:02 AM (IST)


தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், ஏழை எளிய மக்கள் மற்றும் நில உரிமையாளர்களை அலைக்கழித்து அதிகாரிகள் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் பல புகார்கள் எழுந்துள்ளன.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்டப் பத்திரப்பதிவு அலுவலக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வீடு, நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துப் பத்திரப்பதிவுகளுக்கு வரும் பொதுமக்களிடம், அங்குள்ள சில பத்திரப்பதிவு அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்ந்து கட்டாய லஞ்சம் பெற்று வருவதாக மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் அண்மையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும், இந்த அரசுத் துறையின் கீழ்மட்ட உள்கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும், மாறாக லஞ்ச நடைமுறைகள் முன்பை விடப் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பத்திரப்பதிவுக்காக வரும் ஏழை எளிய மக்களிடம் ஏதாவது ஒரு சட்டப்பூர்வச் சாக்குப்போக்குகளைக் கூறி, அதிகாரிகள் திட்டமிட்டுப் பணம் கறந்து வருகின்றனர். தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு லஞ்சப் பணம் தர மறுக்கும் பொதுமக்களின் ஆவணங்களை ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறிப் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதுடன், அவர்களைப் பல நாட்களாகத் தங்களது அலுவலகங்களை நோக்கி அலைக்கழித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

இது குறித்துத் தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவராம் தெரிவித்துள்ளதாவது: "தூத்துக்குடி மாவட்டப் பதிவு அலுவலகத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 சார் பதிவாளர் அலுவலகங்கள் மிக செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்குத் தினந்தோறும் தங்களது வாழ்வாதாரச் சொத்துக்களைப் பதிவு செய்ய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தூத்துக்குடியில் புதிய மாவட்டப் பதிவு அதிகாரி ஒருவர் பொறுப்பேற்ற பின்னரே, இந்த லஞ்சச் சம்பவங்கள் மிகத் துணிச்சலாக அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு ஆவணக் கோப்புகளையும் தீவிரமாகச் சரிபார்ப்பது போலப் பாசாங்கு செய்யும் அதிகாரிகள், அதில் அந்தக் குறை உள்ளது இந்தக் குறை உள்ளது என்று கூறி மிரட்டுகின்றனர். ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை தங்களது கோப்புகளுக்கு ஒப்புதல் பெற ரூ.10,000 முதல் பல லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை என்று ஒன்று தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு அங்கு நிலவரம் மோசமடைந்துள்ளது. எனவே, மாவட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் உடனடியாகத் தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பிரத்தியேகக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து ரகசியக் கண்காணிப்பு மற்றும் அதிரடிச் சோதனைகளை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்காகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மாவட்டப் பத்திரப்பதிவுத் துறை உள்கட்டமைப்பைச் சீரமைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

சங்கர்மே 26, 2026 - 11:34:22 AM | Posted IP 104.2*****

உண்மையான செய்தி வெளியிட்டமைக்கு நன்றிகள் ஆயிரம். மேடம் ரொம்ப ஓவர் வசூல். DR வேடிக்கை பார்க்கிறாரா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory