» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூறாவளி காற்றால் கருவாட்டு குடோன்கள் சேதம் : நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை!

ஞாயிறு 3, மே 2026 9:34:28 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றினால் கடலோரப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கருவாட்டுக் குடோன்கள் தரைமட்டமானதால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றினால் புன்னக்காயல் கடலோரப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மீனவப் பெண்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கருவாட்டுக் குடோன்கள் தரைமட்டமானதால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

புன்னக்காயல் மீனவப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கருவாட்டுக் குடோன்கள் சூறாவளி காற்றினால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மழை வெள்ளம் வந்தாலும், புயல் வீசினாலும் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம். எங்களின் ஒரே வாழ்வாதாரமான கருவாடு விற்பனை முடங்கியுள்ளதால் குடும்பத்தை நடத்த வழியின்றி தவிக்கிறோம் என்று மீனவப் பெண்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்து நீண்ட நேரமாகியும் வருவாய்த்துறை அதிகாரிகளோ அல்லது மற்ற அரசு அதிகாரிகளோ சேதமடைந்த பகுதிகளை வந்து பார்வையிடவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் டினலட்டா ரவி கூறுகையில்: "ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆண்ட கட்சியாக இருந்தாலும் மீனவ மக்களைத் தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனரே தவிர, அவர்களின் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க முன்வருவதில்லை. புன்னக்காயல் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இன்று வரை தீர்க்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தினால் சுமார் 5 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் உடனடியாகப் பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுமே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory