» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நள்ளிரவில் திருடுபோன மினி சரக்கு வாகனம் மீட்பு: சிறுவனிடம் போலீஸ் விசாரணை

ஞாயிறு 3, மே 2026 4:50:46 PM (IST)

திருச்செந்தூரில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி சரக்கு வாகனம் திருடுபோன சில மணி நேரங்களிலேயே, காவல்துறையினர் அதனை மடக்கிப் பிடித்து மீட்டனர். வாகனத்தைத் திருடிச் சென்ற 13 வயது சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த முத்து (24) என்பவர், தனக்குச் சொந்தமான டாடா ஏஸ் (Tata Ace) மினி சரக்கு வாகனத்தை நேற்று (02.05.2026) நள்ளிரவு திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வாகனம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பாதிக்கப்பட்ட முத்து அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தேடுதல் பணியில் இறங்கினர். இது குறித்து மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளும், ரோந்துப் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் செந்தில்வேல் குமார் தலைமையில், ஆழ்வார்திருநகரி காவல் உதவி ஆய்வாளர் லதா மற்றும் போலீசா அடங்கிய குழுவினர் ஆழ்வார்திருநகரி எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டதில் அது திருச்செந்தூரில் திருடுபோன வாகனம் என்பது உறுதி செய்யப்பட்டது.

வாகனத்தை ஓட்டி வந்தது திருநெல்வேலியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த இளஞ்சிறாரைக் கையகப்படுத்தி, வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே துரிதமாகச் செயல்பட்டு வாகனத்தை மீட்ட போலீசாரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory