» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முற்றிலும் போதைப் பொருள் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க வேண்டும் : அமைச்சர் பி.கீதா ஜீவன்

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 3:16:08 PM (IST)



முற்றிலுமாக போதைப் பொருள் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (Drug Free Tamil Nadu)” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தலைமையேற்று, விருதுகள் வழங்கியதை தொடர்ந்து, தூத்துக்குடி அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : தமிழ்நாடு துணை முதலமைச்சர், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட காவல் துறை அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் வாயிலாக குறிப்பாக நமது மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போதைக்கு அடிமையாக இருக்கின்ற பொழுது குடும்பம் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாக மாறுகின்றனர். மேலும், அவர்களால் சரியாக உழைப்பதற்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 

வேலைக்கான வாய்ப்பும் கிடைப்பதில்லை. எனவே, சமூகத்தில் அவப் பெயரோடு புறக்கணிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தன்னிலை தெரியாத நிலைக்கு சென்று விடுகின்றனர். எதிர்காலத்தில் அவர்களின் வாழ்வு என்பது பூஜ்யமாக மாறக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே, போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாக இருக்ககூடாது. 

மேலும், போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பவர்களின் நிலை குறித்து உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக விரோதிகள் எதிர்கால சந்ததியினர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றனர். எனவே, சமூகத்தில் போதைப் பொருட்கள் எங்கு விற்றாலும் மாணவர்களாகிய நீங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கோ தகவல் தெரிவிக்கலாம். நமது இளைஞர் சமுதாயத்திற்கு போதைப் பொருள் கிடைக்ககூடாது என்பதில் உறுதியுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 
போதை பழக்கத்திற்கு உங்களுடைய நண்பர்கள் யாராவது அடிமையாக இருந்தாலும், அவர்களுக்கு அறிவுரைகளை கூறி மீட்டெடுப்பது நமது கடமையாக கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். முற்றிலுமாக போதைப்பொருட்கள் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அதை செயல்படுத்துவதற்கான பயணத்தை நோக்கி பயணிக்க வேண்டும். 

குறிப்பாக இந்த ஆண்டு நமது மாவட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்கள். நமது மாவட்டத்தின் அனைத்து இளைஞர்களுக்கும் இந்த தகவலை கொண்டு சேர்க்க செயல்படுவோம். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம். இளைஞர்களின் வாழ்வை மீட்டெடுப்போம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்கள். 

இந்நிகழ்வில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது : தமிழ்நாடு துணை முதலமைச்சர், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. எந்தவொரு இடத்திலும் எந்தவிதத்திலும் போதைப் பொருட்கள் பயன்பாடு இல்லாத நிலையினை உருவாக்குவதற்காக பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து இடங்களிலும் போதைபொருட்களின் பயன்பாட்டை தடுக்கின்ற வகையில் நாம் அனைவரும் இன்று விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்று உள்ளோம். 

எனவே, மாணவர்களாகிய நீங்களும் போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத ஒரு நிலையினை உறுதி செய்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே, நாமும் அதற்கு முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதன், இ.கா.ப., தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, உதவி ஆணையர் (கலால்) கல்யாணகுமார், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory