» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சடையனேரி கால்வாய்க்குள் இறங்கி போராட்டம் : தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக அறிவிப்பு

சனி 9, ஆகஸ்ட் 2025 3:16:37 PM (IST)

சடையனேரி கால்வாய்க்குள் இறங்கி தண்ணீரை திறக்கும் வரையில் மாபெரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், உடன்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் முக்கிய நீர் ஆதாரமான எழுவரைமுக்கி, சுப்பராயபுரம் (தடுப்பணை), கடாட்சபுரம் குளம், முதலூர் ஊரணி, சாஸ்தாவிநல்லூர் (வைரவன் தருவைகுளம்) பள்ளக்குறிச்சிகுளம், படுக்கப்பத்து குளம், புத்தன் தருவைகுளம், சடையனேரிகுளம், தாங்கைகுளம், கருமேனி ஆற்று தடுப்பணை போன்றவை மருதூர் மேலக்கால் மூலம் சடையனேரி கால்வாய் வழியாக தண்ணீரை பெறுகின்றது.

பாபநாசம் அணையில் போதிய அளவு தண்ணீர் உள்ளநிலையில் மருதூர் மேலக்காலானது கடந்த ஜீன் மாதமே திறக்கப்பட்டு அதன் வாயிலாக முத்தலாக்குறிச்சிகுளம் முதல் தேமான்குளம் வரையுள்ள 16 பாசனக்குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு அவை முழுகொள்ளவை எட்டியுள்ள நிலையில் சாத்தான்குளம், உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மருதூர் மேலக்கால் வழியாக தண்ணீர் வழங்கும் சடையனேரி கால்வாயானது இதுவரையில் திறக்கப்பட வில்லை.

இதனால் அப்பகுதியில் உள்ள குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றது. சாத்தான்குளம், உடன்குடி சுற்றுவட்டாரப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்,கால்நடைகள் நீPரின்றி தவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமானது வேகமாக குறைந்து வருவதால் தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் கருகி வருகின்றது. இதனால் இடைச்சிவிளை, சிறப்பூர், நடுவக்குறிச்சி, பகுதியில் உள்ள விவசாயிகள் தென்னை உள்ளிட்ட மரங்களை பாதுகாக்க பல லட்சரூபாய் கடன்வாங்கி செலவு செய்து ஆழ்துளை கிணறுகளை அமைத்து வருகின்றனர்.

மேலும் பல இடங்களில் நிலத்தடி நீரானது உப்பாக மாறி பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. இந்த உவர்நீரை உடன்குடி பகுதியைச் சார்ந்த ஏழைஎளிய மக்கள் வேறுவழியின்றி குடிநீராக பயன்படுத்துவதால் சிறுநீரகசெயலிழப்பு போன்ற பெரும்பாதிப்பிற்கு அதிக அளவில் உள்ளாகி வருகின்றனர்

ஆண்டுதோறும் சடையனேரி கால்வாயானது முறையாக திறக்கப்படும் பட்சத்தில் சாத்தான்குளம், உடன்குடி சுற்றுவட்டாரப்பகுதியில் தற்போது நிலவிவரும் குடிநீர் தட்டுபாடு நீங்கி நிலத்தடி நீர்மட்டமானது படிப்படியாக உயர்ந்து மீண்டும் செழிப்பு மிக்க பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதுபற்றி விடியல் அரசின் மாவட்ட நிர்வாகம் எந்தவித அக்கறை கொள்வதில்லை.

கடந்த முறை சடையனேரி கால்வாயை திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் பாஜக சார்பில் கோரிக்கை விடுத்தபோது மருதூர் மேலக்கால் வழியாக தண்ணீரைபெரும் பாசனக்குளங்கள் நிரம்பியதும் தண்ணீர் வழங்கப்படும் என்றனர். ஆனால் தற்போது பாசனகுளங்கள் அனைத்தும் நிரம்பியும் இதுவரையில் சடையநேரி கால்வாயானது திறக்கப்பட வில்லை.

இவ்வாறு தண்ணீரை வழங்காமல் விடியல் அரசின் மாவட்ட நிர்வாகமானது ஒவ்வொருமுறையும் ஏமாற்றி பருவமழை வந்த உடன் யாருக்கும் பயன்படாதவாறு அப்படியே வீணாக கடலில் திறந்து விடுவதையுமே பல ஆண்டுகாலமாக செய்து வருகின்றனர்.

இத்தகைய அராஜக போக்கை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற திங்கட்கிழமை 11.08.2025 அன்று மாலை 4.00 மணியளவில் நங்கைமொழி அருகே வறண்டுகிடக்கும் சடையனேரி கால்வாய்க்குள் இறங்கி "தண்ணீரை திறக்கும் வரையில் மாபெரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம். 

சாத்தான்குளம் மற்றும் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக நடைபெறும் இந்த மாபெரும் போராட்டத்தில் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இழந்த உரிமையை மீட்டெடுக்க அப்பகுதி மக்களுக்கு உதவுமாறு அன்போடு அழைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory