» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாடு வளர்ப்பிற்கு பயனாளிகள் தேர்வு!

வியாழன் 15, மே 2025 5:20:52 PM (IST)



தூத்துக்குடியில் மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளை தெரிவு செய்து, முதற்கட்டமாக 52 பயனாளிகளுக்கு ரூ.31,20,000க்கான காசோலைகளை கனிமொழி எம்பி வழங்கி தொடங்கி வைத்தார்

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்முயற்சியாக கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளை தெரிவுசெய்து, முதற்கட்டமாக 52 பயனாளிகளுக்கு ரூ.31,20,000க்கான காசோலைகளை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் (14.05.2025) அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தொகை சுமார் 17,50,176 இலட்சம் பேர் உள்ளனர். அன்றாடம் பொதுமக்களுக்கு தேவையான பாலினை உற்பத்தி செய்யும் அளவிற்கு மாவட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே, துத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கைகளை அதிகரித்து, அதன் மூலம் பால் உற்பத்தியினை அபிவிருத்தி செய்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்முயற்சியாக கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள நபர்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வழியாக கண்டறிந்து நாளது தேதி வரை மாடு வளர்ப்பிற்கு 2896 நபர்களும், ஆடு வளர்ப்பிற்கு 7660 நபர்களும் மற்றும் கோழி வளர்ப்பிற்கு 5357 நபர்களும் என மொத்தம் 15913 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக ஒரு நாள் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சி திட்டத்தில் கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து கூட்டுறவுத்துறையின் வழியாக கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, மாடு வளர்ப்பிற்கு ஒரு மாட்டிற்கு ரூ.60,000/-மும், ஆடு வளர்ப்பிற்கு ரூ.40,000/-மும், கோழி வளர்ப்பிற்கு ரூ.15,000/-மும் 9.5 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

அந்தவகையில், முதற்கட்டமாக கூட்டுறவுத்துறையின் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கோவில்பட்டி மற்றும் கயத்தார் ஆகிய வட்டாரங்களில் மாடு வளர்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 52 நபர்களுக்கு தலா ரூ.60,000 வீதம் ரூ.31,20,000க்கான காசோலைகள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது. பயனாளிகள் அனைவரையும் இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேரில் அழைத்து சென்று, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்களின் உதவியுடன் கறவை மாடுகளை பரிசோதித்து, தரமான அதிக கறவைத்திறன் கொண்ட மாடுகள் வாங்கப்பட்டு, மாடுகளுக்கு மருத்துவக் காப்பீடு பதிவு செய்து, பதிவிற்கான ஆவணமும் பயனாளிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேஷ், மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) பு.காந்திநாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெ.மல்லிகா, உதவி திட்ட அலுவலர் ர.முருகன், கோவில்பட்டி வட்டார இயக்க மேலாளர் சங்கரபாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory