» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பகலில் குடை, தொப்பி இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்!

சனி 26, ஏப்ரல் 2025 3:50:47 PM (IST)

கோடை வெப்ப தாக்க பாதிப்புகளை தடுக்க காலை 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே நடமாடுவதை தவிர்க்கவும். வெப்ப தாக்க தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புறச் சூழல் வெப்பநிலை அதிகமாகும் போது அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உடலிலிருந்து வெளியேறுகிறது.

அதிக வெப்பத்தினால் அதிக தாகம், தலைச்சுற்றல், கடுமையான தலைவலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வடைவதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் பச்சிளம் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்க அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

கோடை வெப்ப தாக்க பாதிப்புகளை தடுக்க காலை 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே நடமாடுவதை தவிர்க்கவும். வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் குடை கொண்டும் அல்லது தொப்பி அணிந்து செல்ல வேண்டும். வெயில் காலங்களில் காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பதை தவிர்க்கவும்.

குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும். தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும், வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தைத் தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும், குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கவும்.

வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறுகள், ஓஆர்எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம். மேலும், பருவகால பழங்களான தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரி மற்றும் நுங்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வது சிறந்ததாகும். ஐஸ் வாட்டர் போன்ற மிகக் குளிர்ந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்.

வெப்ப தாக்க அதிர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக அந்த நபரை குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான பகுதியில் படுக்க வைத்து குடிப்பதற்கு பழச்சாறு அல்லது ஓஆர்எஸ் திரவம் அல்லது தண்ணீரைக் கொடுக்க வேண்டும். உடல் வெப்பத்தை குறைப்பதற்கு குளிர்ந்த தண்ணீரால் உடல் முழுவதும் நனைத்து விட வேண்டும். பின்பு 108 அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்திடல் வேண்டும். 

கோடை காலத்தில் பரவும் நோய்களான அம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் வெயில் கொப்பளங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, பொதுமக்கள் மேற்கண்ட கோடை வெயிலின் வெப்ப தாக்க பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமான்யன்Apr 26, 2025 - 09:59:02 PM | Posted IP 104.2*****

தொப்பி கடைக்கு மான்யம் உண்டா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory