» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்
வியாழன் 24, ஏப்ரல் 2025 3:32:51 PM (IST)

தூத்துக்குடியில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி பொன் விழா அரங்கத்தில் இன்று (24.04.2025), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அமர் சேவா சங்கத்தின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படும் விதமாக தெரிவுசெய்யப்பட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பாக தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN – RIGHTS PROJECT) செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் முதற்கட்ட பணியாக, மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் கண்டறிந்து சமூக தரவு கணக்கெடுப்புப் பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பணியாக, மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் எளிதில் சென்று பயன்பெறும் வகையில் அவரவர் இருப்பிடத்தின் அருகாமையில் ஓரிட சேவை மையங்கள் ஏற்படுத்தி, அனைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைகள் வழங்குவதற்கு ஓரிட சேவை மையம் (One Stop Center) வசதி ஏற்படுத்திக் கொடுக்க கட்டிடங்கள் தேர்வுசெய்யப்பட்டு வருகிறது.
மேலும், இத்திட்டம் மாற்றித்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உள்ளடக்கல், அணுகல் மற்றும் வாய்ப்புகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, அவர்களின் திறனை மேம்படுத்தி, ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்துதல், கடைக்கோடியில் வசிப்பவருக்கும் சமூகப்பராமரிப்பு சேவைகள், பயன்கள் வழங்குவதை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்பு வசதியை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துதல், மாநிலத்தின் திறனை மேம்படுத்தி ஒருங்கிணைந்த சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுதல், மாற்றுத்திறனாளிகளின் தற்சார்பு திறன்களை மேம்படுத்த முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்துதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கி சிறப்பாக நடத்துதல், மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்களை குறைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை ஒருங்கிணைத்தல், அனைத்து துறைகளுக்கான மாற்றுத்திறன் கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்டவைகளை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN RIGHTS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, நமது மாவட்டத்தில் கோட்ட அளவில் 3 மையங்கள், வட்டார அளவில் 15 மையங்கள் செயல்படவுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள வல்லுநர்கள், சமுதாய உதவியாளர் மற்றும் சமுதாய மாறுவாழ்வு பணியாளர்கள் ஆகியோர் பணியாற்றவுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 106 பணியாளர்களுக்கு ஏற்கெனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று 6 ஆலோசகர்கள், 3 இயன்முறை சிகிச்சையாளர்கள், 4 அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பாசிரியர்கள், 3 செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பாசிரியர்கள், 18 சமுதாய உதவியாளர்கள், 43 சமுதாய மறுவாழ்வு பணியாளர்கள் என மொத்தம் 77 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN – RIGHTS PROJECT) செயல்படுத்தும் விதமாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணியாற்றவுள்ளார்கள் என்பது உண்மையிலே மிகப்பெரிய ஒரு பலமாகவும், மிகப்பெரிய ஒரு உந்து சக்தியாகவும் இருக்கும். பொதுவாக பிற துறை பயனாளிகள் தங்களுக்கான பயன்களை சம்பந்தப்பட்ட துறையை நாடி பயன்பெறுவார்கள். ஆனால், மாற்றுத்திறனாளிகள் அவ்வளவு எளிதாக சம்பந்தப்பட்ட துறைகளை நாடுவது கடினமான ஒன்று என்பதை அறிந்து, கடைக்கோடியில் வசிக்கும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் தவறாது சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு முன்முயற்சியாக தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் முன் களப்பணியாளர்களாக நீங்கள் எல்லாம் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இத்திட்டத்தினை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்காக அமர் சேவா சங்கம் முன்வந்துள்ளது. அமர் சேவா சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் நன்கு அறிந்திருக்கிறேன். ஒரு புகழ் பெற்ற நிறுவனமாக அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை திறன்பட செயலாற்றுவது குறித்து முன் களப்பணியாளர்களாகிய உங்களுக்கு அமர் சேவா சங்கத்தின் மூலமாக எடுத்துரைப்பார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்துத் திட்டங்களும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளையும் சென்று சேரும் விதமாக நீங்கள் களப் பணியாற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் சட்டப்பூர்வமான உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, தடைகள் அற்ற கட்டட அமைப்பு உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அனைத்தும் வழங்கப்படுகிறதா என்பதையும் உறுதிசெய்யும் வகையில் பணியாற்ற வேண்டும். தனித்திறன் வாய்ந்த குழந்தைகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் நம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும். அது நமது சமூகக் கடமையாகும். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கான உதவிகளை பெற்றுத்தருவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இந்த அற்புதமான திட்டத்தில் இணைந்து பணியாற்ற வந்திருக்கக்கூடிய முன் களப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு உன்னதமான காரியத்தில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய முக்கியமான காரியங்களில் இந்த பணியும் ஒன்று, இதை மிகவும் ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையினுடைய மகிழ்ச்சி, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணினுடைய வாழ்க்கை முன்னேற்றம், ஒரு மாற்றுத்திறனாளி இளைஞருடைய கல்வி வளர்ச்சி இது போன்ற பல்வேறு விதமான காரியங்கள் இருக்கும். அதில் அனைத்திலும் நீங்கள் எல்லாம் பங்கெடுக்க போகிறீர்கள் என்ற ஒரு உன்னதமான நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், திட்ட அலுவலர் (தமிழ்நாடு உரிமைகள் திட்டம்) சங்கர்சகாயராஜ், அமர் சேவா சங்கத்தின் பொருளாளர் டி.வி.சுப்பிரமணியம், அமர் சேவா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










