» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:27:31 PM (IST)

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்
தூத்துக்குடி மவாட்டம், கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை வளாகத்தில் இன்று(10.04.2025), நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழவில் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: இந்த பகுதியின் மக்களுக்கு பல நாளாக இருந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 348.950 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 327.579 கி.மீ, மாவட்ட இதர சாலை 1540.340 கி.மீ என ஆக மொத்தம் 2216.869 கி.மீ நீள சாலைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. நிர்வாக காரணங்களுக்காகவும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு தூத்துக்குடி நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தில் இருந்து புதிதாக கோவில்பட்டி நெடுஞ்சாலை க(ம)ப கோட்டம் தோற்றுவிக்கப்படுமென சட்டமன்றப் பேரவையில் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையின் அடிப்படையில், தூத்துக்குடி நெடுஞ்சாலை க(ம)ப கோட்டத்தில் இருந்து மாநில நெடுஞ்சாலை 228.880 கி.மீ, மாவட்ட முக்கிய சாலை 89.835 கி.மீ, மாவட்ட இதர சாலை 773.228 கி.மீ என ஆக மொத்தம் 1091.943 கி.மீ நீள சாலைகள் பிரிக்கப்பட்டு 01-04-2025 அன்று கோவில்பட்டி நெடுஞ்சாலை க(ம)ப கோட்டம் தோற்றுவிக்கப்பட்டது. இக்கோட்டக் கட்டுப்பாட்டின் கீழ் கோவில்பட்டி நெடுஞ்சாலை க(ம)ப உட்கோட்டம், விளாத்திகுளம் நெடுஞ்சாலை க(ம)ப உட்கோட்டம், ஒட்டப்பிடாரம் நெடுஞ்சாலை க(ம)ப உட்கோட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எட்டயபுரம் நெடுஞ்சாலை க(ம)ப உட்கோட்டம் ஆகிய நான்கு உட்கோட்டங்கள் உள்ளன. இக்கோட்டமானது கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் மற்றும் சங்கரன்கோவில் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் அதிகம் உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு ஏதுவாக இரண்டு கோட்டங்களாக பிரிப்பதற்கு மக்கள் கோரிக்கைகள் வைத்துக்கொண்டிருந்த நிலையில், நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களும் நமக்காக இதனை செய்துகொடுத்துள்ளார்கள். அதற்காக இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, கண்காணிப்புப் பொறியாளர் (நெ) க(ம)ப திருநெல்வேலி த.ஜெயராணி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, கோட்டப்பெறியாளர் (நெ) க(ம)ப தூத்துக்குடி ஊ.ஆறுமுகநயினார், கோட்டப்பெறியாளர் (நெ) க(ம)ப கோவில்பட்டி செ.ஜெகன்மோகன், உதவி கோட்டப்பொறியாளர்கள் ரெத்தினபாபு, ப.ராஜபாண்டி, விஜய சுரேஷ்குமார், உதவி பொறியாளர்கள் எபனேசர், சார்லஸ் பிரேம்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பில் அச்சங்குளம் ஊராட்சி மீனாட்சிநகரில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, ரூ.9 லட்சம் மதிப்பில் குருவிகுளம் ஊராட்சி இலந்தைபட்டியில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை, ரூ.26 லட்சம் மதிப்பில் கடம்பூரில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், ரூ.6.50 லட்சம் மதிப்பில் கயத்தாறில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை ஆகியவற்றை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். மேலும் ரூ.40 லட்சம் மதிப்பில் பன்னீர்குளம் ஊராட்சியில் கட்டப்பட உள்ள பல்நோக்கு மைய கட்டடப் பணியை கனிமொழி தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் உள்ள 90 நலவாழ்வு மையங்களுக்கு கனிம வள நிதியில் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தானியங்கி பகுப்பாய்வு கருவி, நெபுலைசர், ரத்த அழுத்தம் மானி, மைய விலக்கு சுழற்சிக் கருவி, ஹீமோகுளோபினோ மீட்டர், குளிர்சாதனப்பெட்டி, மருத்துவப்பெட்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 61 பயனாளிகளுக்கு சுமார் 46 லட்சம் மதிப்பிலான இணையவழி பட்டாக்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் பேரூராட்சித் தலைவர்கள் ராஜேஸ்வரி (கடம்பூர்), சுப்புலட்சுமி (கயத்தாறு), துணைத் தலைவர்கள் மாரீஸ்வரி (கடம்பூர்), சபுரா சலீமா (கயத்தாறு), மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா விஸ்வநாதன், பேரூராட்சி உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், உதவி செயறிபொறியாளர் ஹரிஹரன், கயத்தாறு வட்டாட்சியர் சுந்தரராகவன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கமலா, செயற்பொறியாளர் சனல்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










